முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-08 06:28 GMT
புதுடெல்லி,

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஜோ ஜோசப், ஷீலா கிருஷ்ணன்குட்டி, ஜெஸ்ஸிமோள் ஜோஸ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவால் ஏற்படுத்தப்பட்ட துணைக்குழுவை கலைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் முல்லைப்பெரியாறு அணையில் நீர் தேக்குவது, தேக்கப்படும் நீர் பகிர்ந்தளிப்பு, நீர் திறப்பு விகிதம் மற்றும் அணையை திறப்பது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை ஆணையம் விரைவாக ஒரு திட்டத்ததை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்றும் பருவமழை காலத்தில் அணையின் நீர் மட்டத்தை 130 அடியாக குறைத்து நீரை தேக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று, “முல்லைப்பெரியாறு அணையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் விவரங்கள் தொடர்பாகவும், முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகள் என்ன? அவை ஏன் முடிக்கப்படாமல் எதனால் தாமதப்படுகிறது ?

முல்லை பெரியாறு அணையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள், பழுது நீக்கும் பணிகள் மத்திய நீர் ஆணையம் கடந்த 2018-ல் வெளியிட்ட 'அணை பாதுகாப்பு, பராமரிப்பு வழிகாட்டு நெறிமுறைகள்' அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறாதா? என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் கோரியுள்ளனர்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “முல்லை பெரியாறு அணையில் எந்த அபாயத்தையும் மேற்பார்வை குழு கண்டறியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளது என்றும் சட்ட நடைமுறைகளுக்கு முரணாக ரசூல் ஜாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்