கர்நாடகாவில் முதன்முறையாக இளம்பெண்ணுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் முதன்முறையாக இளம்பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
நாட்டில் கொரோனா வைரசின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்திய சுகதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 90 ஆயிரத்து 633 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத அதிக அளவாக இந்த பாதிப்பு அமைந்து உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,065 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்து 13 ஆயிரத்து 812 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 62 ஆயிரத்து 320 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 70 ஆயிரத்து 626 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த 27 வயது கொண்ட இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஜூலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் சிகிச்சை பெற்று பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பினார்.
எனினும், ஒரு மாதம் கழித்து அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா வைரசின் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் 2வது முறையாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.