அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடிக்கு பொருட்கள் உற்பத்தி; வேலைவாய்ப்பு பெருகும்: மத்திய மந்திரி பேச்சு
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடிக்கு பொருட்கள் உற்பத்தியால் நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசியுள்ளார்.
புதுடெல்லி,
2019ம் ஆண்டுக்கான மாநில வர்த்தக சீர்திருத்த திட்டம் தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி வழியே இதனை வெளியிட்டார். இந்த பட்டியலில் ஆந்திர பிரதேசம் தொடர்ந்து முதல் இடத்தினை தக்க வைத்து கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை மந்திரி பியூஷ் கோயல் பேசும்பொழுது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் சீரான வளர்ச்சிக்கான தலைமைத்துவம் ஆகியவற்றால் கடந்த 5 ஆண்டுகளில் எளிமையான முறையில் வர்த்தகம் மேற்கொள்ளும் தரவரிசைகளில் உலகளவில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
தொழிற்சாலைகளின் ஒத்துழைப்புடன், நாங்கள் அடையாளம் கண்டுள்ள 24 பொருட்களின் உற்பத்தியானது அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடியளவிலான தயாரிப்புகளை ஈட்டும். இதனால், வேலைவாய்ப்பு உருவாகும். பொருளாதார நடவடிக்கை விரிவுப்படுத்தப்படும். அவை, இந்தியாவை சரியான இடத்திற்கு வழி நடத்தி செல்லும் என கூறினார்.
அவர் தொடர்ந்து, ஒரு பொருள் ஒரு மாவட்டம் திட்டத்தில் மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இத்திட்டத்தின்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் தங்களுடைய சொந்த பொருட்களை சிறந்த முறையில் உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தும் என கூறியுள்ளார்.