சுஷாந்த்சிங் மரண வழக்கில் சிபிஐக்கு மும்பை போலீஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது: மராட்டிய அரசு
சுஷாந்த்சிங் மரண வழக்கை விசாரிக்கும் சிபிஐக்கு மும்பை போலீஸ் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.
மும்பை,
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
முன்னதாக பணமோசடி தொடர்பாக நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் சோவிக் ஆகியோரிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், வழக்கு வேறு திசைக்கு மாறியது. அவர்களின் வாட்ஸ் அப் உரையாடல்கள் மூலம் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து என்.சி.பி. எனப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் வழக்கை கையில் எடுத்து விசாரிக்க தொடங்கினர்.
நடிகை ரியாவின் சகோதரர் சோவிக் மற்றும் சுஷாந்த் சிங் உதவியாளர் சாமுவேல் மிரண்டா ஆகிய இருவரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தினம், தினம் புதிய திருப்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழலில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மராட்டிய மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், “ சுஷாந்த் சிங் மரண வழக்கில் சிபிஐக்கு மும்பை காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்குகிறது” என்றார்.