மராட்டிய சட்டசபை 7-ந் தேதி கூடும் நிலையில் சபாநாயகர் நானா படோலேக்கு கொரோனா
மராட்டிய சட்டசபை 7-ந் தேதி கூடும் நிலையில் சபாநாயகர் நானா படோலேக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. சட்டசபை கூடுவதால் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8½ லட்சத்தை தாண்டி உள்ளது. மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரை நடத்த ஏற்கனவே திட்டமிட்டு கொரோனா பரவல் காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல கடந்த மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரும் ஒரு வாரமே நடந்தது. இந்தநிலையில் மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 2 நாட்கள் மட்டுமே இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. மராட்டிய சட்டசபை வரலாற்றில் மிககுறுகிய காலம் நடக்க உள்ள கூட்டத்தொடர் இதுவாகும்.
முதல் நாள் கூட்டத்தில் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சிவாஜிராவ் நிலங்கேகர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.2 நாட்கள் நடக்கும் கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் துணை மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது.அதே நேரத்தில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் விவாதங்கள் இருக்காது என சட்டசபை விவகாரத்துறை மந்திரி அனில் பரப் கூறினார். எனினும் இந்த கூட்டத்தொடரில் கொரோனாவை கட்டுப்படுத்த தவறியது, கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு சர்ச்சை, சுஷாந்த் சிங் மரண வழக்கு போன்ற பிரச்சினைகளை கிளப்புவோம் என பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
சட்டசபை தொடங்க 2 நாட்களே உள்ள நிலையில் சபாநாயகர் நானா படோலேக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவர் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தை வழிநடத்த மாட்டார் என்றும், துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் கூட்டத்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் தேசியவாத கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
இதற்கிடையே சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒருநாள் முன்னதாக, அதாவது நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆன்டிஜன் முறையில் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவில் கொரோனா இல்லாத எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சட்டசபைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல எம்.எல்.ஏ.க்களுக்கு முககவசம் உள்ளிட்டவை அடங்கிய சிறப்பு சாதனங்களும் வழங்கப்பட உள்ளது. சட்டசபைக்குள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இருக்கை ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இதேபோல எம்.எல்.ஏ.க்களின் நேர்முக உதவியாளர்கள் சபைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் எம்.எல்.ஏ.க்களின் டிரைவர்களுடன் பார்கிங் பகுதியில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.