கொரோனா பெருந்தொற்று காலத்தில் ‘போலீஸ் படையின் மனிதாபிமானம், வெளியே வந்தது’ - பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் மோடி நெகிழ்ச்சி

பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், போலீஸ் படையின் மனிதாபிமான பக்கம், வெளியே வந்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Update: 2020-09-04 22:48 GMT
ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் 28 பெண்கள் உள்பட 131 ஐ.பி.எஸ். அதிகாரிகள், 42 வார கால அடிப்படை பயிற்சியை முடித்துள்ளனர். இதையொட்டி நேற்று அணிவகுப்பு நடத்திய அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்பாராத ஒன்றை எதிர்கொள்ளும் காரணி அதிகமாக உள்ள பணி, உங்களது பணி. நீங்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதற்கு தயாராக இருக்க வேண்டும். அதிகளவு மன அழுத்தம் இருக்கும். எனவே நீங்கள் உங்கள் அருகிலுள்ளவர்களிடமும், அன்பானவர்களுடனும் தொடர்ந்து பேசுவது முக்கியம்.

அவ்வப்போது, ஒரு நாள் விடுமுறையில், உங்கள் ஆசிரியரைப் போன்ற ஒருவரை அல்லது உங்கள் மதிப்புக்குரிய ஒருவரை சந்தித்து பேசுங்கள்.

நான் போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் தவறாமல் தொடர்பு கொள்கிறேன். ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு அவ்வாறு அவர்களை சந்திக்க முடியவில்லை. இருப்பினும் எனது பதவி காலத்தில் நிச்சயமாக உங்கள் அனைவரையும் ஒரு கட்டத்தில் சந்திப்பேன் என்று நான் நம்புகிறேன். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் நாட்டின் போலீஸ் படையின் மனிதாபிமான பக்கம் வெளியே வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு இளம்பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் காஷ்மீர் பற்றிய கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். அப்போது அவர் காஷ்மீர் யூனியன் பிரதேச மக்கள் அருமையானவர்கள் என மனம் திறந்து பாராட்டினார். மேலும், “காஷ்மீரில் தவறான பாதையில் செல்கிற இளைஞர்களை நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும். பெண்களால் இதை செய்ய முடியும். நமது பெண் போலீஸ் அதிகாரிகள், இதில் காஷ்மீரில் உள்ள தாய்மார்களை பயன்படுத்தலாம். அதை நாம் ஆரம்ப கட்டத்தில் செய்தால், அது மிகவும் பயனுள்ளதாக அமையும்” என கூறினார்.

பயிற்சி முடித்துள்ள இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அவர்கள் பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் உறுதி செய்து, மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் தேசத்துக்கு சேவை செய்யட்டும். சேவையின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு, இந்திய போலீஸ் பணியில் சேர நமது இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்