பாரத ரத்னா’ விருது பெற்றவர் டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணம் ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Update: 2020-09-01 00:22 GMT
புதுடெல்லி

இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017 வரை பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி (வயது 84).

மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், பதவி ஓய்வுக்குப்பின் டெல்லியில் வசித்து வந்தார். இவர் கடந்த மாதம் 9-ந் தேதி தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது மூளையில் ரத்தம் உறைந்தது. எனவே மறுநாள் டெல்லி ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அவசர அவசரமாக உயிர் காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 7 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் மூலம், பிரணாப்பின் மூளையில் இருந்த மிகப்பெரிய ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

முன்னதாக ஆஸ்பத்திரியில் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. மூளையில் நடந்த அறுவை சிகிச்சைக்குப்பின் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமடைந்தது.

எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் ஆழ்ந்த கோமா நிலையை அடைந்தார். வென்டிலேட்டர் ஆதரவில் இருந்த அவருக்கு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்புக்குழு ஒன்று தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. எனினும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதேநேரம் அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து சீராக இருந்தன.

இந்த நிலையில் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. அத்துடன் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்பட்டன. இதனால் பிரணாப் முகர்ஜியின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடினர். ஆனால் நேற்று முன்தினம் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. நுரையீரல் தொற்று காரணமாக பிரணாப்பின் மருத்துவ நிலை சரிந்து வருவதாக நேற்று காலையில் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் கூறினர்.

எனினும் 22 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த பிரணாப் முகர்ஜி நேற்று மாலை 4.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பிரணாப் முகர்ஜி மரணமடைந்த தகவலை அவரது மகனும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அபிஜித் முகர்ஜி தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நாடு முழுவதும் உள்ள மக்கள் ஜெபம், துவா, பிரார்த்தனைகளில் ஈடுபட்டபோதும், எனது தந்தை பிரணாப் முகர்ஜி காலமானார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் கரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக விளங்கிய பிரணாப் முகர்ஜி, மத்திய அரசில் முக்கிய துறைகளின் மந்திரி, மாநிலங்களவை தலைவர், திட்டக்குழு துணைத்தலைவர் என அரசின் உயர் பதவிகளை அலங்கரித்து உள்ளார். இறுதியாக கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை ஜனாதி பதியாகவும் பதவி வகித்தார்.

இவரது உயரிய மக்கள் சேவையை பாராட்டி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கவுரவித்தது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவருடனும் சிறந்த நட்பு கொண்டிருந்த பிரணாப் முகர்ஜியின் மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


அந்த வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நுண்ணறிவு உணர்வு மற்றும் ஞானம் கொண்ட பாரத ரத்னா முகர்ஜி, பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைத்தார். அவரது 50 ஆண்டு கால மகத்தான பொதுவாழ்வில், உயர்ந்த பதவிகளை பெற்றிருந்தாலும் எளிமையாக இருந்தார். தனது அரசியல் அலைவரிசை முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணித்தார்’ என்று குறிப்பிட்டு உள்ளார். ஒரு முதல் குடிமகனாக ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருந்த அவர், ஜனாதிபதி மாளிகையை மக்களுக்கு நெருக்கமானதாக மாற்றியதாக கூறியுள்ள ராம்நாத் கோவிந்த், அதன் வாசல்களை பொதுமக்களுக்காக திறந்து விட்டதாகவும், ‘மேன்மை மிகுந்த’ என்ற வார்த்தை பயன்பாட்டை அவர் நிறுத்தியது வரலாற்று சிறப்பு மிக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘பிரணாப் முகர்ஜியின் மரணத்தின் மூலம் நாடு ஒரு மூத்த அரசியல்வாதியை இழந்துள்ளது. தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தின் மூலம் பணிவான தொடக்கத்தில் இருந்து நாட்டின் உயரிய அரசியல்சாசன பதவியை எட்டிப்பிடித்தார். தனது நீண்ட பொதுவாழ்வில் தான் வகித்த பதவிகள் அனைத்திலும் கண்ணியத்தையும், அலங்காரத்தையும் கொண்டு வந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் கள். ஓம் சாந்தி’ என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரணாப் முகர்ஜி அறிஞருக்கு இணையானவர் எனவும், தனது அரசியல் வாழ்வு முழுவதிலும் போற்றப்பட்ட ஒரு நபர் எனவும் புகழாரம் சூட்டி உள்ளார். மேலும் பிரணாப் முகர்ஜியுடனான தனது அனுபவங்களையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘2014-ல் நான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டபோது டெல்லிக்கு புதியவன். ஆனால் முதல் நாளில் இருந்தே பிரணாப் முகர்ஜியின் ஆசி, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு மூலம் ஆசீர்வதிக்கப்பட்டேன். அவருடனான எனது தொடர்புகளை எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி’ என்று வருத்தத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் பிரணாப் முகர்ஜியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, குறிப்பாக பிரணாப்பின் காலில் விழுந்து ஆசி பெறும் படங்களை அவர் பகிர்ந்து உள்ளார்.

மேலும் செய்திகள்