மத்திய அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா அரசு சதி மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மத்திய அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா அரசு சதி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

Update: 2020-07-22 00:07 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது கட்சியின் இணையவழி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.

அவர் பேசியதாவது:-

தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்காள அரசை, மத்திய அமைப்புகளையும், பண பலத்தையும் பயன்படுத்தி கவிழ்க்க மத்திய அரசு சதித்திட்டம் வகுத்து வருகிறது. நாடு இதுவரை கண்டிராத அழிவு கட்சியாக பா.ஜனதா திகழ்கிறது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும்போது, பா.ஜனதா அரசோ எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கவிழ்ப்பதில் தீவிரமாக இருக்கிறது. மத்தியபிரதேசத்தை தொடர்ந்து, ராஜஸ்தானிலும், மேற்கு வங்காளத்திலும் அரசுகளை கவிழ்க்க முயற்சிக்கிறது.

எல்லா மாநிலங்களையும் குஜராத்தான் ஆள வேண்டுமா? அப்படியானால், கூட்டாட்சி முறையின் அவசியம் என்ன? வேண்டுமானால், ‘ஒரே நாடு-ஒரே கட்சி‘ முறையை கொண்டு வந்து விடுங்கள். நாடு முழுவதும் அச்சத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது.

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு மீண்டு்ம் ஓட்டு போடுங்கள். வங்காள மக்கள்தான் இந்த மாநிலத்தை ஆள வேண்டும். வெளிநபர்களோ, குஜராத் மக்களோ இதை ஆளக்கூடாது. அந்த தேர்தலில், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

மேற்கு வங்காளத்தின் இயற்கை வளங்களை சுரண்டிய மத்திய அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்