நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது தொடர்பான தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

Update: 2020-07-21 21:45 GMT
புதுடெல்லி,

சென்னை ராயபுரம் அரசு காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவும் ஆலோசகராக வக்கீல் கவுரவ் அகர்வால் என்பவரை நீதிபதிகள் நியமித்தனர்.

இந்த வழக்கு கடந்த 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை ராயபுரம் அரசு காப்பகத்தில் அனைத்து குழந்தைகளும் குணமடைந்து தற்போது காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்று,ம், சமூக இடைவெளியும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும், புதிதாக எந்த குழந்தைக்கும் தொற்று ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவும் ஆலோசகர் ஒவ்வொரு மாநிலத்திலும் குழந்தைகள் காப்பகங்களில் கடைப்பிடிக்கப்படும் நல்ல நடைமுறைகள் குறித்து தொகுத்து கோர்ட்டுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். காப்பகங்களில் உள்ள குழந்தைகள் மீது உரிய அக்கறை செலுத்துவது மாநிலங்களின் கடமையாகும். இந்த குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி குறித்து தனித்தனியாக இன்றி அனைத்து அம்சங்களுக்கும் பொதுவான ஒரு உத்தரவை இந்த கோர்ட்டு பிறப்பிக்கும். அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் காப்பகங்களில் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? என்று தணிக்கை செய்து அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஆகஸ்டு 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்