பீகாரில் ஊரடங்குக்கு மத்தியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி
பீகாரில் கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் ஊரடங்குக்கு மத்தியில் விதிமீறலில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா,
பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. பீகாரில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் முதல் மந்திரியின் உறவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், முதல் மந்திரி நிதீஷ் குமார் தனது அலுவலக இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அதிகாரிகள், பொதுமக்கள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்றும் கேட்டு கொண்டார். அவரது அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பீகாரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுவரை 217 பேர் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 646 ஆக உள்ளது. 17,433 பேர் குணமடைந்தும், 9,996 பேர் சிகிச்சையிலும் உள்ளனர். இதனை தொடர்ந்து, பீகாரில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
எனினும், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ரெயில், விமானம், வங்கிகள், மருத்துவமனைகள், விவசாயம் மற்றும் கட்டுமானம் தொடர்புடைய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பீகார் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளந்தா நகரில் கலாசார நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சில பெண்கள் நடனம் ஆடியுள்ளனர். திரளானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் சமூக இடைவெளி, முககவசம் உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை.
இதுபற்றிய வீடியோ ஒன்று ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.