கேரளாவுக்கு துபாயில் இருந்து 230 கிலோ தங்கம் 20 முறைக்கு மேல் தூதரகம் மூலம் கடத்தல் தேசிய புலனாய்வு அமைப்பு

கேரள தங்கக் கடத்தல் வழக்கின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி பைசல் பரீத், துபாயில் இருந்து 230 கிலோ தங்கத்தை 20 முறைக்கு மேல் தூதரகம் மூலம் கடத்தியதாக தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.

Update: 2020-07-20 07:54 GMT
திருவனந்தபுரம்: 

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  என்ஐஏ விசாரணை ஒருபுறமிருக்க, தங்க கடத்தலில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து சுங்கத்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்.  

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அதன் துணைத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட தூதரக பார்சலை  பயன்படுத்தி தங்கம் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பைசல் ஃபரீத் கடந்த வாரம் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று சுற்று விசாரணைக்குப் பிறகு, 230 கிலோ தங்கத்தை கேரளாவுக்கு கடத்தியதாக பைசல் தெரிவித்து உள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வியாபாரம் செய்து வந்த  பைசல், தனது குடும்பத்தினருடன் துபாயில் அல் ரஷீடியாவில் வசித்து வந்தார், கடந்த  வெள்ளிக்கிழமை துபாய் போலீசார் கைது செய்தனர்  அவர் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமையன்று, பைசலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு சர்வதேச போலீசிடம் தேசிய புலனாய்வு அமைப்பு கோரி உள்ளது. ஆவணங்களை மோசடி செய்தல், பயங்கரவாத நிதி மற்றும் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டு உள்ளன. பைசலின் பாஸ்போர்ட்டைத் தடுப்பது குறித்து இந்திய தூதரகம் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி பைசல் பரீத், துபாயில் இருந்து 230 கிலோ தங்கத்தை 20 முறைக்கு மேல் தூதரகம் மூலம் கடத்தியதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கூறியுள்ளது.

மேலும் செய்திகள்