இந்திய எல்லையில் நேபாளம் மீண்டும் துப்பாக்கிச்சூடு - இந்தியர் காயம்
பீகார் எல்லையில் நேபாள போலீஸ் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒரு இந்தியர் காயமடைந்தார்.
பாட்னா:
இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. குறிப்பாக அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா ஒலி இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
எல்லை விவகாரத்தில் இந்தியாவின் பகுதிகளான கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியபகுதிகளை நேபாளம் உரிமைக்கோரி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய-நேபாள எல்லையை பிரிக்கும் மாநிலங்களில் ஒன்றான பீகாரில் எல்லையோர மாவட்டமாக கிருஷ்ணகஞ் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரு நாட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேபாள போலீசார் இன்று அத்துமீறி கிருஷ்ணகஞ் மாவட்டத்தை சேர்ந்த சிலரை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
நேபாள போலீசாரின் இந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கிருஷ்ணகஞ் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு இருநாட்டு எல்லை விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய காலங்களில் இந்தியா-நேபாள எல்லையிலிருந்து இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். கடந்த மாதம், பீகார் மாநிலம் சீதாமாரி அருகே ஒரு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது நேபாள ஆயுத போலீஸ் படை இந்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, இதில் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்தனர்.