நாசிக்கில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் புறப்பட்ட 74 சக்கர பிரமாண்ட லாரி கேரளா வந்தது

நாசிக்கில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் புறப்பட்ட, 74 சக்கரங்களை கொண்ட பிரமாண்ட லாரி கேரளா வந்தது.

Update: 2020-07-19 22:45 GMT
திருவனந்தபுரம்,

நாசிக்கில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் புறப்பட்ட, 74 சக்கரங்களை கொண்ட பிரமாண்ட லாரி கேரளா வந்தது. 70 டன் எடையுடன் 1,700 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்தது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு பல்வேறு வகையான விண்வெளி சாதனங்கள் உருவாக்குவதற்காக, மராட்டிய மாநிலம் நாசிக்கில் ஏரோஸ்பேஸ் ஆட்டோகிளேவ் என்று அழைக்கப்படும் ராட்சத எந்திரம் தயாரிக்கப்பட்டது. நாசிக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பிரமாண்டமான ஆட்டோ எந்திரம் 70 டன் எடை உள்ளதாகவும் 7.5 மீட்டர் உயரமும் 7.5 மீட்டர் அகலமும் கொண்டதாகவும் இருந்தது.

இதை நாசிக்கில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி 74 சக்கரங்கள் கொண்ட பிரமாண்ட லாரியில், ஏரோஸ்பேஸ் ஆட்டோகிளேவ் எந்திரம் ஏற்றப்பட்டு, கேரளாவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 10 மாதங்கள் 4 மாநிலங்கள் வழியாக 1,700 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தற்போது திருவனந்தபுரம் வந்து அடைந்து உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த லாரி ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 கிலோ மீட்டர் மட்டுமே செல்லும். இந்த லாரி முழு சாலையையும் அடைத்துக்கொள்ளும். இதனால் சாலைப்போக்குவரத்தை சரிசெய்ய 32 பேர் கொண்ட ஒரு குழு இந்த லாரியை இயக்க தேவைப்பட்டது. இந்த குழுவினர் லாரியின் பயணம் குறித்து நகரங்களுக்குள் நுழைவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார்கள். பின்னர் அதிகாரிகளுடன் இணைந்து லாரி பயணத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் மின்சார கம்பங்களை அகற்றி உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்த லாரி ஆந்திர மாநிலத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பகல் நேரத்தில் நிறுத்தப்பட்டு, இரவு நேரத்தில் மட்டுமே லாரி இயக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தற்போது இந்த லாரி சம்பந்தப்பட்ட செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் இது ஒரு சாதனை முயற்சி என்றும், ஒருசிலர் இவ்வளவு மரங்கள் மற்றும் மின்கம்பங்களை மாற்றுவதற்கு பதிலாக கடல் வழியாக கப்பலில் கொண்டு வந்து இருக்கலாம் என்றனர். வழக்கமாக 4 முதல் 5 மாநிலங்களை கடந்து செல்ல ஒரு வார காலம் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்