ஊடகங்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை; முதல் மந்திரி பேச்சுக்கு கோவா கவர்னர் பதில்
முதல் மந்திரி கூறியது போல் ஊடகங்களுக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை என்று கோவா மாநில கவர்னர் கூறியுள்ளார்.
பனாஜி,
கோவாவில் கொரோனா பாதிப்புகளுக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். 1,674 பேர் குணமடைந்து உள்ளனர். 1,159 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 2,951 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், முதல் மந்திரி பிரமோத் சாவந்த், ஜூலை 15ந்தேதி (நேற்று) முதல் வரும் ஆகஸ்டு 10ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என கூறினார். இதன்படி, இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். இதேபோன்று இந்த வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஆகிய 3 நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.
இதனால், மருத்துவ சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து, நேற்றிரவு 8 மணி முதல் கோவாவில் பொது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், முதல் மந்திரி சாவந்த் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, கோவா கொரோனா பாதிப்புகள் பற்றி சமூக ஊடங்களில் சில தவறான செய்தி பரப்பப்படுகிறது.
அதனால், கவர்னருடனான சந்திப்பில் நாங்கள் சரியான தகவலை அவரிடம் வழங்கினோம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாங்கள் எடுத்து வரும் முயற்சிகளை அவர் பாராட்டி பேசினார். பின்னர், சமூக ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் தவறான செய்தியை அளிக்கின்றன என கவர்னர் கூறினார் என்று தெரிவித்து உள்ளார்.
எனினும், ஊடகங்களுக்கு எதிராக நான் எதுவும் கூறவில்லை. முதல் மந்திரி முறையற்ற தன்மையுடன் நடந்து கொள்கிறார் என்று கோவா மாநில கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்து உள்ளார். உண்மையில், ஊடகங்கள் நம்முடைய பலம். விடுபட்ட அனைத்து தகவல்களையும் ஊடகங்களில் இருந்தே நான் பெறுகிறேன் என கவர்னர் கூறியுள்ளார்.