இந்தியாவில் கொரோனா பாதிப்பு; 3 நாட்களில் 8 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 நாட்களில் 8 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-07-15 11:56 GMT
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 20,572 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் பாதிப்பு 29,429 ஆக உயர்ந்து 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது.

இதனால், பாதிப்பு எண்ணிக்கை 9,06,752ல் இருந்து 9,36,181 ஆக அதிகரித்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் மராட்டியம் மற்றும் தமிழகம் கொரோனா பாதிப்புகளுக்கு அதிக இலக்காகி உள்ளன.  மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதம் இந்த மாநிலங்களில் உள்ளன.  நாட்டின் மொத்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையான 3,11,565 பேரில் 1,54,134 பேர் இந்த இரு மாநிலங்களிலும் உள்ளனர்.

இதுதவிர கர்நாடகா, டெல்லி, ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் அதிகம் சிகிச்சை பெறுவோரை கொண்ட பிற மாநிலங்கள் ஆகும்.  இவை 1,11,068 என்ற எண்ணிக்கையுடன் 36 சதவீதம் அளவுக்கு உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 9 லட்சத்து 6 ஆயிரத்து 752 ஆக உயர்ந்தது.  இது, 8 லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டு 3 நாட்களில் 9 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதனால், பல மாநிலங்கள் ஊரடங்கை மீண்டும் அறிவித்து உள்ளன.  கர்நாடகா, தமிழகம், கேரளா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மராட்டியம், அசாம், மேற்கு வங்காளம், அருணாசல பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பல்வேறு கால கட்டங்களில் பகுதிவாரியாக ஊரடங்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.

மேலும் செய்திகள்