கர்நாடகாவின் 2 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு; பெங்களூருவில் போக்குவரத்து ரத்து

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளால் 2 மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-07-14 11:14 GMT
பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இதனால், யாத்கீர், தக்ஷிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தில் நாளை (15ந்தேதி) முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமலாகிறது.  இதற்கான உத்தரவை மாவட்ட துணை ஆணையாளர் எம். குர்ம ராவ் பிறப்பித்து உள்ளார்.

இதேபோன்று கர்நாடகாவின் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் நாளை இரவு 8 மணி முதல் 23ந்தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட துணை ஆணையாளர் உத்தரவில் தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வருகிற 21ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதனை முன்னிட்டு பெங்களூரு போக்குவரத்து கழகம் நாளை முதல் பேருந்து சேவையை தற்காலிகம் ஆக நிறுத்துகிறது.  இதன்படி, பெங்களூரு பெருநகர பகுதி, பெங்களூரு நகரம் மற்றும் கிராமப்புற மாவட்ட பகுதிகளிலும் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளுக்காக அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கான போக்குவரத்து செயல்படும்.  இவற்றில் காவல் துறை, சிவில் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்கும், கர்நாடக அரசு, மத்திய அரசு, பொது துறை, தனியார் வாரியங்கள், மாநகராட்சிகள் மற்றும் அனைத்து வகையான நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் பேருந்து சேவை செயல்படும்.

அடையாள அட்டையுடன் டிக்கெட் வைத்துள்ள ரெயில்வே, விமான பயணிகள், தேர்வு நுழைவு சீட்டுடன் கூடிய மாணவ மாணவியர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அரசு, தனியார் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஊடகங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.  பொது பயணிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்