உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை பிரியங்கா தலைமையில் சந்திப்போம்: மாநில காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை பிரியங்கா தலைமையில் சந்திப்போம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் கூறினார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு ஒரு செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உத்தரபிரதேசம் என்பது பிரியங்காவின் மண். அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். அவரும், அவருடைய குடும்பமும் உத்தரபிரதேசம் மற்றும் அதன் கோடிக்கணக்கான மக்கள் மீது பாசப்பிணைப்பு வைத்துள்ளனர்.
கோடிக்கணக்கான உ.பி. மக்களின் இதயங்களில் அவர் வாழ்கிறார். எனவே, சந்தேகமே இல்லாமல், 2022-ம் ஆண்டு நடக்கும் உ.பி. சட்டசபை தேர்தலை பிரியங்கா தலைமையில் சந்திப்போம்.
அவர் அத்தேர்தலில் கட்சியின் முகமாக இருப்பார். அவர் மேற்பார்வையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவேண்டும் என்பதுதான் மக்கள் உணர்வாக உள்ளது.
தேர்தலில், எந்த கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது. அதே சமயத்தில், பொதுமக்களுடனும், ஜனநாயகம், இளைஞர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருடனும் கூட்டணி அமைக்கும்.
பிரியங்காவை ‘டுவிட்டர் தலைவர்‘ என்று பா.ஜனதா சொல்கிறது. பிரியங்கா, மக்களுக்காக தெருவில் இறங்கி போராடுகிறார். சோன்பத்ரா பழங்குடியினருக்காக போராட்டம் நடத்தினார். அவரை பார்த்து பயப்படுவதால்தான், பா.ஜனதா இப்படி சொல்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தொழிற்சாலைகளுக்கும், சர்க்கரை ஆலைகளுக்கும் உத்தரபிரதேசம் பெயர் பெற்றதாக இருந்தது. ஆனால், தற்போது பின்தங்கி இருக்கிறது.
எனவே, காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினால், வளர்ந்த மாநிலமாக்க பாடுபடுவோம் என்று பிரசாரம் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.