பிரதமர் அலுவலகம் சொல்வது போல் ரேவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியதா? - ராகுல் காந்தி கேள்வி
பிரதமர் அலுவலகம் சொல்வது போல் ரேவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியதா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
மத்தியபிரதேச மாநிலம் ரேவா நகரில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்த 1,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியது என்று அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் பிரதமர் அலுவலக டுவிட்டர் பதிவிலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பவகடா சூரிய மின்சக்தி திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைக்கப்பட்டதாகவும், எனவே ஆசியாவிலேயே பெரியது ரேவா சூரிய மின்சக்தி திட்டமா? அல்லது பவகடா சூரியமின்சக்தி திட்டமா? என்பதற்கு மத்திய மின்சார துறை மந்திரி பதில் அளிக்க வேண்டும் என்று கோரி, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவை இணைத்து ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், பிரதமர் மோடியை ‘அசத்யாகிரகி‘ ( பொய் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பவர்) என்று குறிப்பிட்டு உள்ளார்.