கொரோனா நோயாளி உடல் மாற்றி ஒப்படைப்பு: 4 நர்சுகள் பணிநீக்கம்
கொரோனா நோயாளி உடல் மாற்றி ஒப்படைத்த சம்பவம் தொடர்பாக, 4 நர்சுகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானேவில் கொரோனா நோயாளியின் உடலை ஆஸ்பத்திரி ஊழியர்கள் வேறு குடும்பத்தினருக்கு மாற்றி ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதாவினர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் மனு கொடுத்தனர்.
இந்தநிலையில் தானே மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா கொரோனா நோயாளியின் உடலை மாற்றி வழங்கிய 4 மாநகராட்சி செவிலியர்களை பணிநீக்கம் செய்து உள்ளார்.
மேலும் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் யோகேஷ் சர்மா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டாக்டர் அனிருதா மல்காவ்கர் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்துக்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா நிருபர்களிடம் தெரிவித்தார்.