டெல்லியில், 1,000 படுக்கைகளுடன் 12 நாட்களில் கட்டப்பட்ட கொரோனா மருத்துவமனை

டெல்லியில் 1000 படுக்கைகளுடன் 12 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட கொரோனா மருத்துவமனையை மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.

Update: 2020-07-05 23:31 GMT
புதுடெல்லி,

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் தலைநகர் டெல்லியும் ஒன்று. இங்கு நாளும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டு இருந்தது.

எனவே அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையை உறுதி செய்வதற்காக மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ரெயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றி டெல்லிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் குப்பை கிடங்காக பயன்பட்டு வந்த மைதானம் ஒன்றை சீரமைத்து கொரோனா மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), மத்திய ஆயுதப்படைகள் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த சிகிச்சை மையத்தை உருவாக்கின.

1000 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை பணிகள் அனைத்தும் வெறும் 12 நாட்களில் முடிக்கப்பட்டு உள்ளது. சர்தார் படேல் கொரோனா மருத்துவமனை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை ஆயுதப்படையை சேர்ந்த மருத்துவக்குழுவினர் நிர்வகிப்பார்கள். இதன் பராமரிப்பு பணிகளை டி.ஆர்.டி.ஓ. மேற்கொள்ளும்.

இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த மருத்துவமனையில் முதல் ஒரு மாதத்துக்கு ராணுவத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் அடங்கிய 600 பேர் பணியாற்றுவார்கள். இதில் அவசர சிகிச்சை பிரிவுக்கு என 250 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

மிக குறுகிய காலத்தில் கட்டப்பட்டு சாதனை படைத்துள்ள இந்த மருத்துவமனையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதார மந்திரி ஹர்சர்வதன், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ‘டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை தட்டுப்பாடு என்ற நிலை இனி இல்லை. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட படுக்கைகள் டெல்லியில் உள்ளன. இதில் 5,300 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும் அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் குறைவாகவே உள்ளன’ என்று தெரிவித்தார்.

இந்த மருத்துவமனை குறித்து அமித்ஷா தனது டுவிட்டர் தளத்தில் பின்னர் கூறுகையில், ‘இந்த சவாலான நேரத்தில் டெல்லி மக்களுக்கு உதவ பிரதமர் மோடி உறுதிபூண்டு உள்ளார். அவரது உறுதிப்பாட்டை இந்த ஆஸ்பத்திரி மீண்டும் உறுதி செய்திருக்கிறது. இந்த மருத்துவமனையை உருவாக்கியதற்காக டி.ஆர்.டி.ஓ., ஆயுதப்படைகள் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையே டெல்லி சத்தார்பூரில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று முதல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையத்தில் 10 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன.

இங்கு இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய ஆயுதப்படைகளை சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள், துணை மருத்துவப்பணியாளர்கள் என 1000 பேரை கொண்ட மருத்துவக்குழுவினர் உள்ளனர். இவர்களை தவிர மேலும் 1000 துணை மருத்துவ பணியாளர்கள், உதவியாளர்கள், பாதுகாப்பு படையினர் என பெரும் படையே இந்த சிகிச்சை மையத்தில் பணியாற்றி வருகின்றனர்.

1,700 அடி நீளம், 700 அடி அகலத்தில் சுமார் 20 கால்பந்து மைதானம் அளவுக்கு பரந்து விரிந்துள்ள இந்த சிகிச்சை மையத்தின் 90 சதவீத படுக்கைகள் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த மருத்துவ மையத்தை திறந்து வைத்த டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த சிகிச்சை மையம் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்