மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம்

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-07-03 19:21 GMT
புதுடெல்லி,

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மத்திய மற்றும் மாநில அல்லது யூனியன் பிரதேச கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டு உள்ளார்.

இந்த இடங்கள் தற்போது நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக கவலை வெளியிட்டு உள்ள அவர், இந்த ஒதுக்கீட்டை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய மற்றும் மாநில அல்லது யூனியன் பிரதேச கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு முறையே 15 சதவீதம், 7.5 சதவீதம் மற்றும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன. ஆனால் மத்திய நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு நிறுத்தப்பட்டு உள்ளது.

மாநில அல்லது யூனியன் பிரதேச கல்வி நிறுவனங்களில் இத்தகைய இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வழங்கப்படாததால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் இழக்கப்பட்டு உள்ளதாக அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு கூறியிருக்கிறது.

மருத்துவ நிறுவனங்களில் மத்திய அரசு கையாளும் இந்த இதர பிற்படுத்தப்பட்டோருக்கான அகில இந்திய ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது, அரசியல் சாசனத்தின் 93-வது திருத்தத்தை மீறும் செயலாகும். மேலும் தகுதி வாய்ந்த பின்தங்கிய வகுப்பினருக்கு மருத்துவக்கல்விக்கு தடை ஏற்படுத்துவதும் ஆகும்.

எனவே சமத்துவம் மற்றும் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் இதர பிறப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என உறுதியாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சோனியா காந்தி அந்த கடித்தில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்