டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்- இந்தியா 7 நாள் கெடு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை 7 நாட்களுக்குள் பாதியாக குறைக்குமாறு இந்தியா கெடு விதித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று நேரில் அழைத்தது. அவரிடம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து இந்தியா அடிக்கடி கவலை தெரிவித்து வந்ததை சுட்டிக்காட்டியது. அந்த அதிகாரிகள், உளவு வேலையில் ஈடுபடுவதாகவும், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. கடந்த மே 31-ந் தேதி, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேர் கையும், களவுமாக பிடிபட்டு வெளியேற்றப்பட்டது, அதற்கு ஒரு உதாரணம் என்று எடுத்துரைத்தது.
மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் அரசு அச்சுறுத்தி வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது. சமீபத்தில், 2 இந்திய அதிகாரிகளை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்று காட்டுமிராண்டித்தனமாக நடத்தியதை சுட்டிக்காட்டியது. பாகிஸ்தான் அதிகாரிகளின் செயல்பாடுகள், வியன்னா தீர்மானத்துக்கோ, இருதரப்பு ஒப்பந்தங்களுக்கோ பொருத்தமாக இல்லை. மாறாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பது போல்இருக்கிறது. எனவே, பாகிஸ்தானுடனான தூதரக உறவை குறைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை 7 நாட்களுக்குள் பாதியாக குறைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.
பதிலுக்கு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை இந்தியா பாதியாக குறைத்துக் கொள்ளும் என்று தெரிவித்தது.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.