இன்று, இந்தியா- சீனா ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை

இந்தியா, சீனா ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

Update: 2020-06-22 08:26 GMT
புதுடெல்லி

கடந்த 2017-ம் ஆண்டு கூட சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் இரு நாட்டு படைகள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அங்கு சீன ராணுவம் சட்ட விரோதமாக மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு நாட்டு படைகளும் மோதல், கைகலப்பில் ஈடுபட்டன.

சர்வதேச அளவில் கவனம் பெற்ற இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. டோக்லாம் பகுதியில் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்த பதற்றம் இதன் மூலம் முடிவுக்கு வந்ததுடன், இரு நாடுகளும் தங்கள் படைகளையும் அங்கிருந்து விலக்கிக்கொண்டன.

இந்த சம்பவத்துக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சுமுக நிலைக்கு திரும்பிய நிலையில், சீன ராணுவம் மீண்டும் தனது வேலையை காட்டியுள்ளது. இந்த முறை அவர்களது கவனம் லடாக்கில் இருந்தது. லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் சட்ட விரோதமாக ஊடுருவினர்.

கடந்த மாத தொடக்கத்தில் நடந்த இந்த ஊடுருவலை கண்டறிந்த இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினரை திரும்பி செல்லுமாறு வலியுறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்தனர். மேலும் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தவுலத் ஓல்டி போன்ற பகுதிகளிலும் இரு நாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதும் சூழல் உருவானது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சீனா ஆயுதங்களுடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்தது. இதனால் இந்தியாவும் கூடுதல் படைகளை லடாக்கில் களமிறக்கியது. மேலும் உத்தரகாண்ட், அருணாசல பிரதேசம், சிக்கிம் என இந்தியா-சீனா எல்லையில் இரு நாடுகளும் படைகள் குவித்தன. இதனால் இரு நாட்டு எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.

ஒருபுறம் படைகள் குவிக்கப்பட்டாலும், மறுபுறம் இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தீவிரம் காட்டின. அதன்படி ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலும், மேஜர்கள் மட்டத்திலும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே இரு தரப்பிலும் ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினர். இதில் இரு நாடுகளும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டன. 

இந்த சூழலில் நேற்று முன்தினம் பாயிண்ட் 14 எனும் இடத்தில் இரவு திடீரென இரண்டு நாட்டு வீரர்களிடையே மோதல் வெடித்தது. இந்த பகுதியில் சீன படைகள் கூடாரம் அடித்து தங்கியுள்ளனர். இந்த கூடாரங்களை அகற்றக் கூறி இந்திய படையினர் கூறியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.

இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குகின்றன.
இருநாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சீனாவின் மால்டோ பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

"கால்வான் மற்றும் பிற பகுதி உள்பட அனைத்து பிரச்சினைகளும் விவாதிக்கப்படும்" என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்