லடாக் எல்லையில் சில பகுதிகளில் இருந்து இந்திய-சீன படைகள் வாபஸ்

இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து, லடாக் எல்லையில் சில பகுதிகளில் இருந்து இந்திய-சீன படைகள் வாபஸ் பெற்று இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Update: 2020-06-09 23:15 GMT
புதுடெல்லி, 

கிழக்கு லடாக்கில் எல்லைப் பகுதியில் கடந்த மாத தொடக்கத்தில் சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதால் இந்திய வீரர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எல்லையையொட்டி சீனா தனது படைகளை குவித்ததால் இந்திய ராணுவமும் அங்கு கூடுதல் படைகளை அனுப்பி வைத்தது.

இதனால் பதற்றம் ஏற்பட்டதால், அதை தணிக்க இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது எல்லையில் அமைதி ஏற்பட இரு தரப்பும் பாடுபடுவது என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பிபி-15 ரோந்து பகுதி ஆகிய 3 இடங்களில் இருந்து சீன ராணுவமும், இந்திய ராணுவமும் தங்கள் வீரர்களில் கணிசமான பேரை வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும், இரு தரப்பினரும் அமைத்து இருந்து கூடாரங்கள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டதாகவும் டெல்லியில் நேற்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் பங்கோங் சோ, தவுலத் பெக் ஓல்டி ஆகிய பகுதிகளில் எல்லையில் முகாமிட்டு இருக்கும் இரு நாட்டு படைகளின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

எல்லையில் பதற்றத்தை மேலும் தணிக்க இரு நாட்டு ராணுவ மேஜர் ஜெனரல்கள் இன்று (புதன்கிழமை) சந்தித்து பேச இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் இது தொடர்பாக ராணுவ அமைச்சகத்தின் சார்பிலோ அல்லது வெளியுறவு அமைச்சகத்தின் சார்பிலோ அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

சீன தரப்பிலும் இதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்