இமாசலபிரதேச மாநில போலீஸ் தலைமையகத்துக்கு ‘சீல்’
கொரோனா தொற்று அச்சம் காரணமாக, இமாசலபிரதேச மாநில போலீஸ் தலைமையகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
சிம்லா,
இமாசலபிரதேச மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக சஞ்சய் குண்டு அண்மையில் பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 1-ந் தேதி போலீஸ் தலைமையகத்தில் அவரை நேரில் சந்தித்து ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் தலைமையக கட்டிடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் டி.ஜி.பி. உள்பட அங்கு பணியில் இருந்த 30 அதிகாரிகள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் டெல்லியை சேர்ந்தவரா? அல்லது இமாசலபிரதேசத்தை சேர்ந்தவரா? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.