கொரோனா பாதித்த பெண்ணுடன் வாகனத்தில் பயணம் செய்த 16 பேர்: சென்னையில் இருந்து சென்ற தொழிலாளர்கள்

நாகலாந்து மாநிலத்தில் கொரோனா பாதித்த பெண்ணுடன் வாகனத்தில் 16 பேர் பயணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2020-06-05 22:00 GMT
கொஹிமா, 

சென்னையில் இருந்து சராமிக் சிறப்பு ரெயில் மூலம் நாகலாந்து மாநிலம் திமாபூர் போய்ச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 17 பேர் அங்குள்ள ஒரு பள்ளியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னதாகவே அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என தெரியவந்து இருப்பதாக கூறி, அங்கிருந்து பெரன் மாவட்டம் ஜலுகி என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு வாகனத்தில் அனுப்பி வைத்து உள்ளனர்.

ஆனால் பின்னர் வந்த பரிசோதனைகளின் முடிவில் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதியானது தெரிய வந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி பெரன் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும், அவருடன் வாகனத்தில் சென்ற மற்ற 16 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளதா? என்பதை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பரிசோதனை முடிவு வரும் முன்பே அரசு ஊழியர் ஒருவர் கவனக்குறைவாக அவர்கள் அனைவரையும் வாகனத்தில் அனுப்பி வைத்ததே இந்த குளறுபடிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்