திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

Update: 2020-06-05 09:44 GMT
திருப்பதி.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கையொட்டி கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் கோவிலில் 6 கால பூஜைகளும் வழக்கம்போல் நடந்து வருகின்றன. 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டு, வருகிற 8-ந்தேதியில் இருந்து கோவில்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால்  கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி வரும் ஜூன் 8ம் தேதி முதல் ஏழுமலையான் தரிசனம் திருமலையில் தொடங்கப்பட உள்ளது. ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் தேவஸ்தான ஊழியர்களுக்கும், ஜூன் 10ம் தேதி திருமலையில் வசிக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது. அதன்பின் ஜூன் 11ம் தேதி முதல் இதர மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் தொடங்கப்பட உள்ளது.

திருமலையில் தினசரி 6 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. காலை 6.30 மணிமுதல் மாலை 7 மணிவரை ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். முதல் ஒரு மணி நேரம் வி.ஐ.பி தரிசனமும், அதற்கு பின் சர்வ தரிசனமும் தொடங்கப்பட உள்ளது. 3 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் மூலமாகவும், அலிபிரியில் உள்ள டிக்கெட் கவுண்டர் மூலம் 3 ஆயிரம் பேருக்கு நேரடி தரிசன டிக்கெட் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்