யானைக்கு உணவில் பட்டாசு வைத்து வெடித்து கொல்வது இந்திய கலாச்சாரம் இல்லை - பிரகாஷ் ஜவடேகர் கடும் கண்டனம்

கேரளாவில் கர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-04 09:41 GMT
புதுடெல்லி,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம்  சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது. இதனைப் பார்த்து பயந்த மக்கள், தங்களுக்கும் தங்கள் ஊருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என எண்ணி, யானையை விரட்ட அன்னாசிப்பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர். மனிதர்கள் வழங்கிய உணவை அந்த யானை சாப்பிட்டதும் வாயில் வெடி மருந்து வெடித்தது. இதனால் அந்த கர்ப்பிணி யானைக்கு தாள முடியாத வலி ஏற்பட்டது. இதையடுத்து அந்த கர்ப்பிணி யானை தண்ணீரில் நின்றபடியே தனது உயிரை விட்டது.

கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் மலப்புரத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டதை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கவனித்துள்ளது. இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கேரளாவில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். யானைக்கு உணவில் பட்டாசு வைத்து வெடித்து கொல்வது போன்று செய்வது இந்திய கலாச்சாரம் இல்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்