நிசர்கா சூறாவளி குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ; தயார் நிலையில் தேசிய பேரிடர் குழுக்கள்
அரேபிய கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா சூறாவளி இன்று பிற்பகலுக்குள் மராட்டியம் மற்றும் குஜராத்தின் கடலோர மாவட்டங்களைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி
அரேபிய கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா சூறாவளி இன்று பிற்பகலுக்குள் மராட்டியம் மற்றும் குஜராத்தின் கடலோர மாவட்டங்களைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் 39 அணிகள் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் குழுக்களில் 16 குஜராத்திலும், 20 மராட்டியத்திலும் , டாமன் மற்றும் டையுவில் இரண்டு, தாத்ரா மற்றும் நகர்காவேலியில் ஒரு அணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அரேபிய கடலின் எல்லையில் உள்ள கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
புயல் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் வடக்கு மராட்டிய கடற்கரையை நோக்கி நகர்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்போது இது மராட்டியத்தின் அலிபாக்கிலிருந்து 200 கி.மீ தொலைவிலும் மும்பையிலிருந்து 250 கி.மீ தொலைவிலும் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மதியம் 2.30 மணியளவில் நிசர்கா மும்பை கடற்கரையை அடையும் எனவும் கணித்துள்ளது.
கடலோரப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கும், அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதற்கும் தேசிய பேரிடர் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் பதிலளிப்புப் படையின் ஒவ்வொரு குழுவும் 45 பணியாளர்களைக் கொண்டுள்ளது எனதேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.