கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது.
புதுடெல்லி,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்குவது வழக்கம். சில ஆண்டுகள் ஓரிரு நாட்கள் தாமதமாகவோ அல்லது முன்னதாகவோ தொடங்கும். இந்த ஆண்டு வழக்கம் போல் நேற்று (ஜூன் 1-ந் தேதி) அங்கு தேன்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கேரளாவில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து உள்ளதாகவும், திருவனந்தபுரம், கொல்லம், புனலூர், ஆலப்புழா, கோட்டயம், கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட 14 இடங்களில் மழை பதிவாகி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதற்கிடையே, அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி இருப்பதாகவும், இது மேலும் வலுவடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக மாறும் என்றும், இதன் காரணமாக மழை தீவிரம் அடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.