கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது
இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்று தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
ஜெனீவா,
சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 196 நாடுகளில் பரவியுள்ள கொரோனா, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது. கொரோனா முதன் முதலாகக் கண்டறியப்பட்ட சீனாவில் இந்த நோய்த்தொற்று கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது.
அமெரிக்காவில் மட்டும்16,86,436- பேருக்கு இதுவரை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒருலட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 4,51,702- பேர் மீண்டுள்ளனர். அதேபோல், பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளும் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சராசரியாக 6 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதனால், கொரோனா அதிகம் பாதித்த முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.38 லட்சமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4021-ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் வருமாறு:-
அமெரிக்கா - 1,686,436
பிரேசில்- 365,213
ரஷியா- 344,481
ஸ்பெயின்- 282,852
பிரிட்டன்- 259,559
இத்தாலி- 229,858
பிரான்ஸ்- 182,584
ஜெர்மனி-180,328
துருக்கி-156,827
இந்தியா-138,845.