அடுத்த 10 நாட்களுக்கு 2,600 ரெயில்கள் இயக்கப்படும்; ரெயில்வே வாரிய தலைவர் தகவல்
அடுத்த 10 நாட்களுக்கு 2,600 ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே வாரிய தலைவர் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால், பேருந்து, ரெயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சரக்கு ரெயில்கள் செல்ல அனுமதி உள்ளது. இது தவிர்த்து புலம்பெயர் தொழிலாளர்களின் நன்மைக்காக ஷ்ராமிக் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்படுவது பற்றி ரெயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, ஜூன் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை தொடங்க உள்ளது. முதற்கட்டமாக 200 விரைவு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரெயில்கள் இயக்கப்படும். ரெயில் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட வாய்ப்பு உள்ளது. முன்பதிவு இல்லாத பெட்டிகள் எதுவும் இருக்காது.
80 சதவீதம் ரெயில்கள் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 நாட்களில் 36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.
டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட உள்ளன. இதேபோன்று முன்பதிவு கால அவகாசம் 30 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளி மற்றும் அதீத சுகாதாரம் கடைப்பிடிக்கப்படும். உடனடியாக உண்ணும் உணவு வகைகள் மட்டும் வழங்கப்படும்.
அடுத்த 10 நாட்களில் 2,600 ரெயில்கள் இயக்கப்படும். ஏதேனும் மாநில அரசிடம் இருந்து கோரிக்கைகள் எங்களுக்கு வருமெனில், மாநிலத்திற்குள் ரெயில்களை இயக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என அவர் தெரிவித்து உள்ளார்.