மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் இழப்பு ரூ.5,237 கோடி
மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.5,237 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மார்ச் காலாண்டில், செல்போன் சேவைத் துறையைச் சேர்ந்த பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.5,237 கோடி இழப்பு கண்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.107 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.23,723 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.20,602 கோடியாக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் தொடங்கியபோது பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கு ரூ.559-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.603-க்கும், குறைந்தபட்சமாக ரூ.556.70-க்கும் சென்றது. இறுதியில் ரூ.599.15-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 11.34 சதவீதம் உயர்வாகும்.