நாடு முழுவதும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை
நாடு முழுவதும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
என்றாலும் முககவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் சரியாக பின்பற்றாததால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பீகார், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கை இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டன. மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படவேண்டும் என்பதில் அந்த மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.
இந்தநிலையில் பொதுமுடக்கம் இன்று இரவுடன் முடிவடையும் நிலையில் மேலும் நாடு முழுவதும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மராட்டிய அரசு, தமிழக அரசு ஏற்கனவே மே 31-ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.