மத்திய அரசு அறிவித்த சலுகைகளில் ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏதுமில்லை - ப.சிதம்பரம் சாடல்

மத்திய அரசு அறிவித்த சலுகை திட்டங்களில் ஏழைகளுக்கும், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஏதும் இல்லை என்று ப.சிதம்பரம் சாடினார்.

Update: 2020-05-13 23:45 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளான இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரையாற்றும் போது வெளியிட்டார்.

இதுகுறித்த விரிவான தகவல் களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் எனவும் அவர் குறிப்பிட்டார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதன்படி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று ரூ.20 லட்சம் கோடி சலுகை திட்டங்களில் சிலவற்றை அறிவித்தார்.

இதையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் சலுகை தொகுப்பில், லட்சக்கணக்கான ஏழைகளுக்கும், பட்டினியால் வாடிக்கொண்டு, தங்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருக்கிற இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஏதும் இல்லை.

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி பிணையற்ற கடன்களை அறிவித்து இருக்கிறது. ஆனால் மீதமுள்ள ரூ.16.4 லட்சம் கோடி எங்கே?

சாதாரணமான சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு சலுகை தொகுப்பை அறிவித்திருக்கிறார்கள், மற்றபடி இந்த அறிவிப்புகள் ஏமாற்றத்தையே தந்துள்ளன.

இந்த அரசை பொறுத்தமட்டில், தனது அறியாமை மற்றும் பயத்தின் கைதியாக இருக்கிறது. அரசு அதிகளவில் செலவு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அரசு விரும்பவில்லை. அரசு கடன் வாங்க வேண்டும். அதை செய்வதற்கும் அரசிடம் விருப்பம் இல்லை.

மாநிலங்கள் அதிகளவில் கடன் வாங்கவும், செலவு செய்யவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆனால் அதற்கும் மத்திய அரசு விரும்பவில்லை.

முதலில் மத்திய அரசு செய்ய வேண்டியது என்னவென்றால், அடித்தட்டில் உள்ள 13 கோடி குடும்பங்களின் கைகளில் பணத்தை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால், இதற்கு அரசுக்கு ஆகிற செலவு ரூ.65 ஆயிரம் கோடிதான்.

கொரோனா பிரச்சினையில், மத்திய அரசு துறை வாரியாக நிதி உதவியை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்