பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள்; நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மாலை விரிவாக விளக்கம்

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் பற்றி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கங்களை அளிக்கிறார்.

Update: 2020-05-13 07:07 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிப்பது பற்றியும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தெலுங்கானா, அசாம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது இது 5-வது தடவை ஆகும். அப்போது ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என அவர் கூறினார்.

அவர் தொடர்ந்து பேசும்பொழுது, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாம் தற்சார்புடன் இருக்க வேண்டும்.  இதுதான் நாம் முன்னேறுவதற்கான ஒரே வழி. இந்தியாவின் தற்சார்புத் தன்மை உலகின் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சமாதானத்தில் அக்கறை கொண்டு உள்ளது.

21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது. 21-ம் நூற்றாண்டு இந்தியா என்னும் கனவு மெய்ப்பட நாம் அனைவரும் இந்தியாவின் தற்சார்பு தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவ தொடங்கிய போது இங்கு நோய்த்தொற்று பாதுகாப்பு உடை ஒன்று கூட தயாரிக்கப்படவில்லை. வெகுசில ‘என்95’ பாதுகாப்பு முகக்கவசங்களே கிடைத்தன. இப்போது இந்தியாவில் 2 லட்சம் நோய்த்தொற்று பாதுகாப்பு உடைகளும், 2 லட்சம் ‘என்95’ பாதுகாப்பு முகக்கவசங்களும் தினமும் தயாரிக்கப்படுகின்றன.

‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். இது குறித்து நிதி மந்திரி நாளை (அதாவது இன்று) விரிவான தகவல்களை வெளியிடுவார்.

ஒவ்வொரு இந்தியனும் உள்நாட்டு தயாரிப்புகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். நம் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவது மட்டுமின்றி அதுபற்றி பெருமையாகவும் பேசவேண்டும் என கூறினார்.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்.  இந்த சந்திப்பில், பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை வெளியிடுகிறார்.  அதற்கான விரிவான விளக்கங்களையும் அவர் தருகிறார்.

மேலும் செய்திகள்