‘சிங்கம்’ பட பாணியில் 2 கார்களுக்கு நடுவே வீரசாகசம் செய்த போலீஸ் அதிகாரி
மத்திய பிரதேசத்தில் பணியில் இருந்தபோது ‘சிங்கம்’ பட பாணியில் 2 கார்களுக்கு நடுவே நின்றபடி பயணித்து வீரசாகசம் செய்த போலீஸ் அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமோ,
மத்திய பிரதேசத்தின் தமோ நகரில் நரசிங்கார் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக இருந்து வருபவர் மனோஜ் யாதவ்.
இந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான சிங்கம் பட காட்சியால் ஈர்க்கப்பட்ட மனோஜ், தன்னையும் ஒரு ஹீரோவாக நினைத்து கொண்டு, காவலர் சீருடையுடன் பணியில் இருந்தபோது 2 கார்களுக்கு நடுவே நின்றபடி பயணித்து வீரசாகசம் செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்தும் உள்ளார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவின. மேலதிகாரிகளின் கவனத்திற்கும் இந்த வீடியோ பதிவு சென்றது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு ஹேமந்துக்கு ஐ.ஜி. அனில் உத்தரவிட்டார். இவை இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டியாக அமைந்து விடும் என கூறி மனோஜுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வருங்காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.