4 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல, 366 சிறப்பு ரெயில்கள்
பிற மாநிலங்களில் வந்து வேலை பார்த்த 4 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 366 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
புதுடெல்லி,
கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொது போக்குவரத்து சாதனங்கள் இயங்கவில்லை.
இதன் காரணமாக சொந்த மாநிலத்தை விட்டு பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வந்து வேலை பார்த்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு போக முடியாமல் சிக்கி தவித்தனர். இப்போது அவர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க ‘ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள்’ இயக்கப்படுகின்றன. அந்த வகையில் இதுவரை 366 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் 4 லட்சம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகிற வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இந்த ரெயில்களில் 287 ரெயில்கள் ஏற்கனவே போய்ச்சேர வேண்டிய இடங்களுக்கு சென்று அடைந்து விட்டன.
இவற்றில் 127 ரெயில்கள் உத்தரபிரதேசத்துக்கும், 87 ரெயில்கள் பீகாருக்கும், 24 ரெயில்கள் மத்தியபிரதேசத்துக்கும், 20 ரெயில்கள் ஒடிசாவுக்கும், 16 ரெயில்கள் ஜார்கண்டுக்கும், 4 ரெயில்கள் ராஜஸ்தானுக்கும், 3 ரெயில்கள் மராட்டியத்துக்கும், தலா 2 ரெயில்கள் தெலுங்கானாவுக்கும், மேற்கு வங்காளத்துக்கும், தலா ஒரு ரெயில் ஆந்திராவுக்கும், இமாசலபிரதேசத்துக்கும் போய்ச்சேர்ந்து விட்டன.
இந்த ரெயில்கள் அனைத்தும் திருச்சி, டிட்லாகர், பரவுனி, கந்த்வா, ஜெகநாத்பூர், குர்தா ரோடு, சாப்ரா, பாலியா, கயா, புர்ணியா, வாரணாசி உள்ளிட்ட பல இடங்களில் இருந்து புறப்பட்டு சென்றவை ஆகும்.
இன்னும் 79 ரெயில்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த ரெயில் பயணத்துக்கு ஆகிற செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த ரெயில்கள் 24 பெட்டிகளையும், தலா 72 இருக்கைகளையும் கொண்டவை. இருப்பினும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் 54 பேர் மட்டுமே ஒரு பெட்டியில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு மத்தியில், பிற மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்களை சுமந்து வருகிற ரெயில்களை தங்கள் மாநிலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல்படி, கடந்த 6 நாட்களில் ஏறத்தாழ 300 ஷ்ராமிக் சிறப்பு ரெயில்களை குறுகிய அறிவிப்பில் இயக்குவதற்கு ரெயில்வே உதவுகிறது. சிக்கித்தவிக்கிற இடம் பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றி, திரும்ப அழைத்து வர அனைத்து மாநிலங்களும் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதனால் அடுத்த 3, 4 நாட்களில் அவர்கள் அனைவரையும் நாங்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல முடியும்” என கூறி உள்ளார்.
இதேபோன்று மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்து ஏற்கனவே கடிதம் எழுதியது நினைவுகூரத்தக்கது.