மும்பைக்கு ராணுவம் அழைப்பா? மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே பதில்

மும்பையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாததால், ராணுவத்தை ரோந்து பணிக்கு அழைக்க இருப்பதாக பரவலாக பேசப்பட்டது.

Update: 2020-05-08 15:32 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம்தான் முதலிடம் வகிக்கிறது.  மராட்டியத்தில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

மராட்டியத்தில்  தலைநகர் மும்பையில்தான் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் தினந்தோறும் ஏற்படும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைக்கு நிகராக மும்பையில் தினமும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. மும்பையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாததால், ராணுவத்தை ரோந்து பணிக்கு அழைக்க இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. 

இந்த நிலையில், ராணுவத்தை ரோந்து பணிக்கு அழைக்கும் திட்டம் இல்லை என்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மறுப்பு தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே கூறுகையில், “ மும்பையில் ராணுவத்தை ரோந்து பணியில் ஈடுபட போவதாக   கடந்த  2-3 தினங்களாக செய்திகள் உலா வருகின்றன. மும்பையில்,  ராணுவத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. நான் இதுவரை செய்த அனைத்தையும்,  உங்களிடம் முறையாக தெரிவித்துவிட்டே செய்து இருக்கிறேன். நீங்கள் அனைவரும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், அதுவே போதும். எனவே, ராணுவத்தை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.  

மேலும் செய்திகள்