ஊரடங்குக்கு இடையே நாட்டில் இருந்து 60 ஆயிரம் வெளிநாட்டினர் வெளியேற்றம்
ஊரடங்குக்கு மத்தியிலும் 60 ஆயிரம் வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுத்து நிறுத்தும் வகையில் ஊரடங்கு போட்டுள்ள நிலையில், 72 நாடுகளை சேர்ந்த 60 ஆயிரம் பேர் இங்கு சிக்கி இருந்தனர். அவர்கள் ஊரடங்குக்கு மத்தியிலும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இதேபோன்று வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அங்கிருந்து இங்கு மீட்டுக்கொண்டு வருவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது, இது தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகங்கள் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியர்களுக்கு செய்கின்றன என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
வளைகுடா நாடுகளிலும் பிற பிராந்தியங்களிலும் சிக்கி தவித்து வருகிற இந்தியர்களை மீட்டு வர கடற்படை கப்பல்களையும், ராணுவம் மற்றும் பயணிகள் விமானங்களை அனுப்பவும் மாபெரும் திட்டம் ஒன்றை மத்திய அரசு தீட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.