பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட துணிச்சலுடன் நிதி தொகுப்பை அறிவிக்க வேண்டும் - பிரதமருக்கு காங்கிரஸ் கோரிக்கை

பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீத அளவுக்கு நிதி தொகுப்பு திட்டத்தை துணிச்சலுடன் அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-04-13 19:40 GMT
புதுடெல்லி, 

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா, நேற்று காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரடங்கு அவசர கதியில் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, ஏழை மக்களின் துயரம் தணியும் வகையில், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ‘பி.எம்.கேர்ஸ்’ என்ற நிதியத்துக்கு மத்திய அரசு நிதி திரட்டி வருகிறது. அதுபோல், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் நிதி அளிக்க அனுமதிக்க வேண்டும். அதுதான் பாரபட்சமற்ற, நியாயமான நடவடிக்கையாக இருக்கும்.

இந்த நேரத்தில் நிதி பற்றாக்குறை பற்றியோ, பணவீக்கம் பற்றியோ கவலைப்பட வேண்டாம். ஆனால், ஊரடங்கு காலம் முடிவடைந்த பிறகு, பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட நிதி தொகுப்பை அறிவிப்பதில் பிரதமர் மோடி துணிச்சலுடன் செயல் பட வேண்டும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 முதல் 6 சதவீதம் வரை அந்த நிதி தொகுப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற சில நாடுகள், தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் அளவுக்கு நிதி தொகுப்பை அறிவித்துள்ளன. அமெரிக்கா, தனது உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத அளவுக்கு நிதி தொகுப்பை அறிவித்துள்ளது. எனவே, இந்த இலக்கை நோக்கி மத்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும்.

அதுபோல், மாநிலங்களுக்கு சிறப்பு நிதி உதவியோ, மானியமோ அறிவிக்க வேண்டும். மாநிலங்களுக்கான அனைத்து நிலுவைத்தொகையும் வழங்கப்பட வேண்டும். அதன்மூலம், மாநிலங்கள் நிதி சிக்கலில் இருந்து மீண்டு வர முடியும்.

இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், சில முக்கியமான மருந்துகளை உற்பத்தி செய்து வருகின்றன. அத்தகைய நிறுவனங்களையும், காப்பீடு, நிதி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களையும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்க முயற்சிக்கின்றன.

எந்த நாடும் இதை அனுமதிக்காது. ஆகவே, இதை தடுக்கும்வகையில், மத்திய அரசு ஒரு கொள்கையை வகுக்க வேண்டும். செபி, ரிசர்வ் வங்கி போன்றவை நடவடிக்கை எடுக்குமாறு கூற வேண்டும்.

ஊரடங்கு நீடித்துக் கொண்டே சென்றால், 40 கோடி இந்திய தொழிலாளர்கள் வறுமையில் மூழ்குவர் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விசேஷ நிதி உதவியை அறிவிக்க வேண்டும். இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.

மேலும் செய்திகள்