1 லட்சம் தனிமை படுக்கை வசதியுடன் நாடு முழுவதும் 586 சிறப்பு ஆஸ்பத்திரிகள் - கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு 1 லட்சம் தனிமை படுக்கைகளுடன் 586 சிறப்பு ஆஸ்பத்திரிகள் ஏற்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-04-11 23:30 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கொரோனா வைரஸ் சிகிச்சை ஏற்பாடுகள் குறித்த தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 586 சிறப்பு ஆஸ்பத்திரிகளுக்கு இலக்கு வைத்து ஏற்பாடு செய்யப்படு கிறது. இந்த ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 1 லட்சம் தனிமை படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்.

இந்த ஆஸ்பத்திரிகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 11 ஆயிரத்து 500 படுக்கை வசதி உருவாக்கப்படும். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கப் படுகிறது. நமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் எங்கே அதிகமாக இருக்கிறது என்பதை முன்கூட்டியே கண்டறிவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப் படாமல், பிற கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்திருந்தால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை வரும் 15-ந் தேதி நிலவரப்படி 8 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், ஊரடங்கு, சமூக இடைவெளியை பராமரித்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1035 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்றி உள்ளது. இதன்மூலம் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 7,447 ஆகி உள்ளது. இந்த கால கட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 40. இதன் மூலம் மொத்தம் பலியானவர்கள் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் முன்கூட்டியே நிலைமையை கணித்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. சுவாச ஆரோக்கியத்தை பலப்படுத்த ஏற்ற வகையிலும், நோய் எதிர்ப்புச் சக்தியை பெருக்கும் விதத்திலும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் வழிமுறைகளை வகுத்துள்ளது. இதை மாவட்ட அளவிலான தற்செயல் திட்டத்தில் இணைக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரசுக்கு தீர்வாக கருதப்படுகிற மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு இல்லை. 5 லட்சம் ஆன்டிபாடி (நோய் எதிர்ப்பு பொருள்) சோதனை கருவிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் வந்து சேரவில்லை.

இதுவரை நாட்டில் 1 லட்சத்து 70 ஆயிரம் மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 16 ஆயிரத்து 564 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்