கொரோனா பாதிப்பு:கேரளாவில் சிகிச்சை பெற்று குணமாகி சொந்த நாடு திரும்ப காத்திருக்கும் வெளிநாட்டினர்

கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நான்கு பேர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

Update: 2020-04-11 04:48 GMT
படம்: manoramaonline
கொச்சி

கேரளா மாநிலம் கொச்சியில் இருக்கும் ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையில், இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டீவன் ஹான்காக்(61) மனைவி அன்னே வில்லியம் (61) ஜேனட் லே(83) மற்றும் ஜேன் எலிசபெத் ஜாக்சன்(63) ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில் அவர்கள் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்ததால், கடந்த வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதற்கு முன்னர் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளில், இத்தாலிநாட்டைச் சேர்ந்த ராபர்டோ டோனோசோ(57) மற்றும் இங்கிலாந்து நாட்டவர்களான லான்சன்(76) எலிசபெத் லான்ஸ்(76) மற்றும் பிரையன் நீல்(57) ஆகியோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்திருந்தனர்.அவர்களில், பிரையன் நீல் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டார். அதன் பின் அவர் கொச்சியில் இருக்கும் கலாமாசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்தார்.

சிறப்பு அனுமதி பெற்ற பின்னர் அவருக்கு எச்.ஐ.வி-க்கான மருந்து வழங்கப்பட்டது, அது அவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முக்கியமாக உதவியதாக கூறப்படுகிறது.மேலும், குணமடைந்த வெளிநாட்டவர்கள் கொச்சியில் உள்ள போல்கட்டி ஹோட்டலில் கண்காணிக்கப்படுவார்கள்.

கண்காணிப்புக் காலத்திற்குப் பிறகு நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் முன்மாதிரியாக சிறப்பாக பணியாற்றுவதாக கூறி, அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சர் கே. கே. ஷைலஜா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்