கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுப்பு: குறுகிய அரசியல் ஆதாயம் தேட பாகிஸ்தான் முயற்சி - இந்தியா குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காமல், அரசியல் ஆதாயம் தேட பாகிஸ்தான் முயற்சிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ‘சார்க்’ நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் முயற்சியில், நேற்றுமுன்தினம் ‘சார்க்’ நாடுகளின் வர்த்தக அதிகாரிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
அதில், கொரோனாவால் ஏற்படும் பொருளாதார இழப்பை தணிப்பது குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இந்த மாநாட்டை பாகிஸ்தான் புறக்கணித்தது.
மேலும், இதுபோன்ற முன் முயற்சிகள், இந்தியாவுக்கு பதிலாக, ‘சார்க்’ அமைப்பின் தலைமையில் நடந்தால்தான் உறுதியானதாக இருக்கும் என்று பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று கருத்து தெரிவித்தன. அந்த வட்டாரங்கள் கூறியதாவது:-
பாகிஸ்தான் கருத்தை பார்த்தால், ‘சார்க்’ விதிமுறைகளை பயன்படுத்தி, இந்தியாவின் முன்முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் என்று தோன்றுகிறது.
மக்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், குறுகிய அரசியல் ஆதாயம் அடைய பாகிஸ்தான் முயற்சிப்பதாக தெரிகிறது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.