கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா பாதிப்பு எதிரொலியாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2020-04-05 09:29 GMT
புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  கடந்த மார்ச் 24ந்தேதி நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அன்று நள்ளிரவு முதல் வரும் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.  பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு எச்சரிக்கை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 62ல் இருந்து 75 ஆக நேற்று உயர்ந்தது.  நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும், கேரளா 3வது இடத்திலும் உள்ளன.  மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 537 ஆகவும், தமிழகத்தில் 485 ஆகவும், கேரளாவில் 306 ஆகவும் இருந்தது.

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும் 3,072 ஆக நேற்று உயர்ந்து இருந்தது.  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்புடைய விவகாரங்கள் பற்றி முன்னாள் ஜனாதிபதிகளான பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதேபோன்று முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா ஆகியோருடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடனும் கலந்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதன்படி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் மற்றும் உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரியான அகிலேஷ் யாதவ், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்