இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை: தயாராக இருக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
இந்தியாவில் வருகிற 15-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் சேவைகளை தொடங்க தயாராக இருக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரக்கு ரெயில் சேவை தவிர்த்து அனைத்து பயணிகள் ரெயிலும் வருகிற 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் 15-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் ரெயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.
ரெயில்வே பாதுகாப்பு, செயல்பாடு உள்ளிட்ட துறைகளின் அனைத்து ஊழியர்கள், ரெயில்வே கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள் ஆகியோர் 15-ந் தேதி முதல் மீண்டும் பணிக்கு வர தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், மத்திய அரசு நியமித்துள்ள மந்திரிகள் குழு ஒப்புதல் வழங்கிய பிறகு ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே ரெயில்வே சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான செயல் திட்டம் ஒன்றை தயாரித்து கால அட்டவணை, ரெயில்களின் கால இடைவெளி, காலியாக உள்ள ரெயில்வே ரேக்குகள் ஆகியவை தொடர்பான திட்டம் ஆகியவற்றை அனைத்து மண்டலங்களுக்கும் ரெயில்வே துறை அனுப்பி உள்ளது.
அனைத்து மண்டலங்களும் ரெயில் சேவையை தொடங்க தயாராக இருக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. 15-ந் தேதியில் இருந்து ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட 80 சதவீத ரெயில் சேவைகள் திட்டமிட்டபடி மீண்டும் தொடங்கும். உள்ளூர் ரெயில்களும் விரைவில் மீண்டும் இயங்குவதற்கு வாய்ப்புகள் உள்னன.
ரெயில் பயணிகளை ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனைக்கு பிறகே பயணம் செய்ய அனுமதிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ரெயில் சேவைகள் 14-ந் தேதி வரை மட்டுமே ரத்து செய்யப்பட்டு உள்ளதால், 15-ந் தேதி முதல் மீண்டும் தொடங்குவதற்கு புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்க தேவையில்லை என்றும், இதுதொடர்பான உறுதியான செயல்திட்டம் இந்த வார இறுதியில் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.