பிரதமர் மோடியுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் இன்று சந்திப்பு
கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பிரதமர் மோடியை சுகாதாரத்துறை மந்திரி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,
சீனாவில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை 31 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க சென்னை, டெல்லி உள்பட 5 இடங்களில் ராணுவ மருத்துவ முகாம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக இந்த சந்திப்பின் போது ஆலோசனை நடத்தப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.