தூங்கி... தூங்கி...விழுந்த உபேர் கார் டிரைவர் வேறு வழி இன்றி தானே காரை ஓட்டிய பெண் பயணி!

உபேர் கார் டிரைவ தூங்கி தூங்கி விழுந்ததால் வேறு வழியில்லாமல் தானே காரை ஓட்ட முன் வந்த பயணியின் செயல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2020-03-05 13:06 GMT
மும்பை,

மும்பையைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி திவ்யா நாய்க் ( வயது 28) இவர் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி புனேவிலிருந்து அந்தேரிக்குச் செல்ல உபேர்  கார் நிறுவனம் ஒன்றில் காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து தேஜஸ்வினியை ஏற்றிக்கொண்ட சென்ற கார் டிரைவர் சிறிது தூரம் சென்றவுடன் அவருக்கு போன் அழைப்பு வந்தது வாகனத்தை ஓரம் நிறுத்தி பேசாமல் காரை இயக்கியப்படியே செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேஜஸ்வினி போனில் கவனம் செலுத்துவதை தவிர்த்து காரை ஓட்டுவதில் கவனம் செலுத்துங்கள் என்று உபேர்  கார் டிரைவருக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இதனையடுத்து கார் டிரைவர் போனை கீழே வைத்து விட்டு வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்தினார். 

இதனையடுத்து  சிறிது நேரம் வாகனம் ஓட்டிய அவர் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே திடீரென தூங்கி... தூங்கி... விழுந்தாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த பெண் பயணி தேஜஸ்வினி, அவரை எழுப்பி வாகனத்தை ஒழுங்காக ஓட்டுமாறு கண்டித்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் வாகனத்தை ஒழுங்காக ஓட்டிய அவர் மீண்டும் தூங்கி விழுந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தூக்க கலக்கத்தில் வாகனத்தை மற்றொரு காரின் மீது கொண்டு இடித்தும் விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த பெண் பயணி தேஜஸ்வினி அவரிடம் இருந்து காரை வாங்கி ஓட்டியுள்ளார். ஆனால், அவரிடம் இருந்து காரை வாங்கும் முன் தனக்கு முதுகு வலி இருப்பதால் தன்னால் நீண்ட தூரம் ஓட்ட முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, வாகன ஓட்டி காரை அவரிடம் கொடுத்து அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து ஒய்யாரமாக தூங்கியுள்ளார். அதன் பின்னர் தேஜஸ்வினி தான் சேரும் இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக வாகனத்தை வாங்கி ஓட்டியுள்ளார். 

இதனையடுத்து கார் டிரைவர் தூங்குவதை வீடியோ எடுத்த அவர் இந்த சம்பவத்தை கண்டித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகியுள்ளது. கார் டிரைவரை கண்டித்தும், அந்த பெண் பயணிக்கு ஆதரவாகவும் சிலர் குரல்கொடுத்து வருகின்றனர். 

இது தொடர்பாக உபேர் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

இது ஒரு வருந்ததக்க சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதனை பற்றி அறிந்ததும் காரை இயக்கிய கார் டிரைவர் நிறுவனத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்