நிர்பயா வழக்கு; 4 குற்றவாளிகளுக்கும் வரும் 20ந்தேதி காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ந்தேதி காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.
அவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போய் இருந்தது.
இந்தநிலையில், குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ந்தேதி தூக்கில் போட டெல்லி கோர்ட்டு கடந்த 17ந்தேதி உத்தரவிட்டது.
குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2ந்தேதி ஜனாதிபதி முன் கருணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் தள்ளுபடியானது. இதனால் குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை தூக்கில் போடுவதற்கான சட்டப்பூர்வ தடை எதுவும் இல்லாத சூழல் உள்ளது.
கருணை மனு நிராகரித்து 14 நாட்களுக்குள் அதன் விவரம் சட்டப்படி குற்றவாளிக்கு தெரிவிக்கப்படவேண்டும். இதனால் குற்றவாளி பவன் குமார் குப்தாவுக்கு 14 நாட்கள் அவகாசம் கிடைத்து உள்ளது. இதனால் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவது தள்ளி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டு, மறு உத்தரவு வரும் வரை நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது. இதனால் 3வது முறையாக தூக்கு தண்டனை நிறைவேற்றம் தள்ளி போனது.
இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ந்தேதி காலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய மரண வாரண்ட் உத்தரவை பிறப்பித்து உள்ளது.