கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பயணி வந்த விமானத்தின் சிப்பந்திகளுக்கு ஏர் இந்தியா திடீர் உத்தரவு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பயணி வந்த விமானத்தின் சிப்பந்திகள் அனைவரும் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-03-03 04:14 GMT
புதுடெல்லி,

வியன்னாவில் இருந்து டெல்லிக்கு கடந்த 25 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் இந்தியா வந்த பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, டெல்லியைச்சேர்ந்த அந்தப் பயணி வந்த விமானத்தின் சிப்பந்திகள் அனைவரும் 14 நாட்கள் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த மெமோவை ஏர் இந்தியா சம்பந்தப்பட்ட சிப்பந்திகளுக்கு அனுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு  அறிகுறிகள் எதுவும் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் இதே போன்ற அறிவுறுத்தல், அந்த விமானத்தில்  பயணித்த பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி தெளிவான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. போயிங் 787 ரக விமானமான அதில், 200 பயணிகள் வரை பயணிக்கலாம். 

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள அந்தப் பயணி, வியன்னாவில் இருந்து வந்ததால், டெல்லி விமான நிலையத்தில் அவர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  

ஏனெனில் ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இருப்பதாக தகவல் எதுவும் இல்லை என்பதால் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே வெளியேற அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  இத்தாலியில் இருந்து சாலைப்பயணம் மூலமாக வியன்னா வந்து அங்கிருந்து டெல்லிக்கு அந்தப்பயணி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்